வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர். அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும். கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த க்ரோனஸின் மனைவி ரேஹாவைத்தான் அவர்கள் தாய் தெய்வமாக வழிபட்டனர்.

ரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சைபெலி என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட்டனர்.இந்த வழிபாடு என்பது கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு, வீர சாகசங்கள் என பல்வேறு விஷயங்கள் இடம்பெறுவதாக அமைந்தது.

ஆனால் நாம் கொண்டாடும் அன்னையர் தினம், அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த அன்னா ஜார்விஸ் என்பவர்தான் துவக்கி வைத்து வழிகாட்டியவர்.அன்னா ஜார்விஸ் திருமணமானவரோ, பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல.

அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதால் இவரை மையப்படுத்தித்தான் அன்னையர் தினமே உருவாக்கப்பட்டது.தனது அன்னையைப் பாராட்டி, சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார்.

சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ், ஏதாவது ஒரு நாளையாவது, எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும், தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார்.அதற்காக அவர் கடுமையாக உழைத்தார்.

சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அன்னாவும் அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களுக்கு நேரடியாக கடிதங்களை எழுதி அன்னையர் தினத்திற்கு பெரும் ஆதரவு திரட்டினர்.

இதன் காரணமாக 1911ஆம் ஆண்டு அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட முழக்கங்களின் வாயிலாக 1914ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி அதிபர் உட்ரோவ் வில்சன் கூட்டறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டார்.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாடுவது என்பதுதான் அந்த கூட்டறிக்கையில் இருந்தது.

எனவே தனது அன்னையை முன்னோடியாக வைத்து, அன்னையே ஆகாத அன்னா ஜார்விஸின் கடின முயற்சியினால்தான் ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்றைய நிலைமைதற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்ட்ரேலியா, மெக்சிகோ, கனடா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் அன்னையர் தினம் மே இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. வேறு சில நாடுகளில் வேறு சில தினங்களிலும் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தில் எங்கெங்கோ வாழும் பிள்ளைகள் தங்களது தாயை நினைவு கூர்ந்து அவர்களுக்கு தங்களது நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்.

தற்போதெல்லாம் அன்னையர் தினத்தன்று தொலைபேசி அழைப்புகளும், இணையதள அரட்டைகளும் எப்போதும் பிசியாக இருக்கும். மலர்களும், வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்களின் விற்பனையும் ஜரூராக இருக்கும்.அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காகவும், தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்துப் போராடிய அன்னா ஜார்விஸிற்கு, வணிக நோக்கத்திற்காக இன்று பல உலக தினங்கள் விளம்பரப்படுத்துப்பட்டு அதில் அன்னையர் தினமும் ஒன்றாக இருப்பது அறிய நேரிட்டால் அவரது மனம்... அன்னையை நிற்க வைத்து காலில் விழுந்து வணங்குங்கள் என்றார் மறைந்த யாகவா முனிவர். என்ன இது நிற்க வைத்து வணங்குவது என்ற கேள்விக்கு, தாய் இறந்த பிறகு அவரது காலடியில் விழுந்து எல்லோரும் வணங்குவர், அதனால் உயிரோடு இருக்கும் போதே (அவரை நிற்க வைத்து) காலில் விழுந்து வணங்கி அவரை பெருமைப் பெருங்கள் என்றார்