தொட்டியில் நட்ட செடி மண் கெட்டியாக இருக்கும்வரைத்தான்னு தானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது தான் இல்லை. இங்கிலாந்தில் உள்ள கியூ கார்டனில் 234 வருடங்களாக ஒரு தொட்டிச் செடி வாழ்ந்துவருகிறது. இதுதான் உலகின் வயதான தொட்டிச் செடியாகக் கருதப்படுகிறது.. அதை சமீபத்தில் இடம்மாற்றி அமைத்தார்கள். அதற்கு ஒரு பாதிப்பும் இல்லாமல் இடம் மாற்றியதுப் பற்றியது தான் இச்செய்தி.
உலக தோட்ட ஆராய்ச்சியாளர்களுக்கெல்லாம் மிகப் பரீச்சியமானப் பெயர் கியூ கார்டன்ஸ். உலகில் உள்ள அரிய செடி கொடிகள் எல்லாம் இங்கே பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் சைகாட் இனத்தைச் சேர்ந்த இந்த தொட்டிப் பனைமரம். இதனுடைய வளர்ச்சி மிகமிகக் குறைவானது. ஆனால் நீண்ட ஆயுள் கொண்டது.

சுமார் 234 வருடங்களில் 15 அடி உயரத்தை மட்டுமே தொட்டிருக்கும் இந்த தொட்டிப் பனை இருந்த தொட்டி தனது சக்தியை இழந்து மூச்சு முட்ட தொடங்கிவிட்டது. அது இடம் பெயர்ந்து 20 வருடங்களுக்கு மேலாகி விட்டது என்பதை தோட்டக்கலை நிர்வாகம் உணர்ந்தது.

கேப்டன் குக்கின் கடல் பயணத்தின் போது கிடைத்த இந்த தொட்டிப் பனை சுமார் 160 வருடங்களுக்கு முன் கியூ கார்டனுக்குள் நுழைந்தது என்கிறார்கள்.

மேலும் ஜூராசிக் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்த அரியவகை தொட்டிப் பனையை கட்டிக்காப்பது தங்களது கடமை என்றுணர்ந்தவர்கள், அதை வேறு தொட்டிக்கு மாற்ற திட்டம் போட்டார்கள்.

சுமார் 3 மாதகால துல்லியமான திட்டத்திற்குப் பிறகு, 1000 கிலோ எடை கொண்ட இதை கடந்த 29 ஆம் தேதி 9 தோட்டக்காரர்கள் மற்றும் ஒரு கிரேன் உதவியுடன், வேறு தொட்டிக்கு பாதுகாப்பாக இடம் மாற்றினார்கள்.

கியூ கார்டன் தனது 250 வருட விழாவை தற்போது கொண்டாடி வருகிறது. அந்த வயதை நெருங்கப்போகும் தொட்டிப் பனையை வெற்றிகரமாக இடம் மாற்றி, அதன் சரித்திரத்தில் மற்றொரு பெருமையைத் தேடிக்கொண்டிருக்கிறது கியூ கார்டன் நிர்வாகம்.